Saturday, 12 March 2016

ஈழ போராட்ட வரலாறில் முதன் முதலில் பகிரங்கத்திற்கு வந்தத இயக்கங்கள் இடையேயான மோதல்கள்

புளொட் சுந்தரம் பிரபாவால் படுகொலை : 

அச்சுக்கூடத்தில் சிந்திய இரத்தம் – இலங்கை வரலாற்றில் பெரும் கொள்ளை

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான விரிசல் அதிகமாகியது. புலிகளில் இருந்து பிரிந்துவந்த உமா-சுந்தரம் குழுவினர் தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்)என்னும் பெயரில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 1981ம் ஆண்டு  தைப்பொங்கல் தினத்தை  முன்னிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்  பொங்கல்  வாழ்த்துக்களை  வெளியிட்டது.
அதேசமயம் புலிகள் என்ற பெயரையும் உமா-சுந்தரம் குழுவினர் பயன்படுத்தி வந்தனர். ‘புதிய பாதை’பத்திரிகையும் தொடர்ந்து வெளிவந்து கூட்டணியினரை சாடிக்கொண்டிருந்தது. சுந்தரம் ஒரு சுறுசுறுப்பான போராளி. ஆயுதங்களைக் கையாள்வதிலும் தேர்ச்சியானவர். ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலில் துணிச்சலாகச் செயற்பட்டு அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் சுந்தரம்.
சுந்தரத்தை ‘மண்டையில் போடவேண்டும்’ என்று முடிவு செய்தார் பிரபாகரன். யாழ் வெலிங்கடன் திரையரங்குக்கு முன்பாக இருந்தது சித்திரா அச்சகம். அங்கு தான் ‘புதிய பாதை’பத்திரிகை அச்சிடப்பட்டது.  ஆக்கங்கள் கொடுக்கவும் அச்சிடப்பட்ட ஆக்கங்களை சரிபிழை பார்க்கவும் சுந்தரம் சித்திரா அச்சகத்திற்கு வந்து செல்வார். சுந்தரத்தை அச்சகத்தின் உள்ளே வைத்து சுடவேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

சுந்தரத்துக்கு குறி

2.1.1982 அன்று வழக்கம் போல சித்திரா அச்சகத்திற்கு வந்தார் சுந்தரம். அவர் உள்ளே சென்று அச்சிடப்பட்ட ஆக்கங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அச்சகத்தின் ஜன்னல் ஒன்றின் வழியாக சுந்தரத்தை குறி பார்த்தது ஒரு கைத்துப்பாக்கி. வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. சுந்தரத்தின் உயிர்பிரிந்தது. முதன் முதலில் இயக்கமோதல் பகிரங்கத்திற்கு வந்தது அன்று தான்.
இயக்கங்களின் முரண்பாடு துப்பாக்கியால் தீர்க்கப்பட்ட முதல் சம்பவமும் அது தான். அதற்கு முன்னர் புலிகள் இயக்கத்தின் உள் இயக்கப் பிரச்னையில் சரவணன் எனப்படும் பற்குணரசா, மட்டுநகர் மைக்கல் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
ஆனால் இரு பிரிவாக இயங்கிய அமைப்புக்களிடையே நிலவிய முரண்பாடு துப்பாக்கியால் தீர்க்கப்பட்டது சுந்தரம் கொலையில் தான் ஆரம்பித்தது. அச்சகத்தில் வைத்து சுந்தரம் கொல்லப்பட்டதிலும் ஒரு நோக்கம் இருந்தது.
‘புதிய பாதை’ பத்திரிகையை அச்சிடுவதற்கு வேறு   ஒரு அச்சகமும் முன் வராமல் இருக்கவேண்டும். அதற்கான அச்சுறுத்தலாகவே ‘புதிய பாதை’ அச்சிடப்பட்ட அச்சகத்தில் வைத்தே சுந்தரத்தை பிரபா அணியினர் தீர்த்துக் கட்டினார்கள். சுந்தரம் கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பேசிய அமிர்தலிங்கம் ‘புதிய பாதை’ வெளிவராமல் தடுப்பதாகக் கூறியிருந்தார் என்று ‘புதிய பாதை’குழுவினர் தெரிவித்தார்கள். ‘சுந்தரம் புலிப்படை’என்ற பெயரிலும் பிரசுரங்கள் வெளியாகியிருந்தன. இயக்க மோதல்களை வேதனையோடு நோக்கினார்கள் மக்கள். பிரசுரங்கள் பரபரப்பாக வாசித்தறியப்பட்டன.

பிரபா குழு பொய் விளக்கம் - 

சுந்தரம் தமது இயக்க ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தார் என்றும் தமது இயக்க பெயரை பயன்படுத்தினார் என்றும் அதனால் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகவும் பிரபாகரன் அணியினர் கூறினார்கள். இதன் மூலம் இயக்க மோதல்கள் பகிரங்கத்துக்கு வந்தமை இலங்கைப் புலனாய்வுப்பிரிவுக்கு வாய்ப்பாக அமைந்தது.
‘புதிய பாதை’தொடர்பாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதனால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரில் பகிரங்கமாக இயங்க முடியாமல் போனது.
தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி என்ற பெயரில் இயங்கிய இளைஞர்கள் பலர் உமா மகேஸ்வரன் தலைமையில் செயற்பட முன் வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த இரா.வாசுதேவா. இரா-வாசுதேவாவை அமைப்பாளராகக் கொண்டு தமிழீழ விடுதலைகக் கழகம் என்றும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தலைமறைவாக இயங்கியது. அதன் தலைமையில் மக்கள் அமைப்பாக ‘தமிழீழ விடுதலைக் கழகம்’ பகிரங்கமாகச் செயற்பட்டது. புலனாய்வுத்துறையினரை ஏமாற்றவே அந்த முயற்சி.
நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்  ஜெகன்- குட்டிமணி

பிரபா புலிகள் அமைப்பில் இருந்து விலகி குட்டிமணி தங்கத்துரையின் டேலோவில் சேர்ந்து செய்த நீர்வேலி வங்கி கொள்ளை 


பிரபாகரன்  குட்டிமணி – தங்கத்துரையின் டேலோவில் ஒரு பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். நீர்வேலியில் இருந்து வங்கியில் இருந்து பெருந்தொகையான பணம் யாழ்நகர் வங்கிக்கு கொண்டு செல்லப்படும் தகவல் அவர்களுக்கு கிடைத்தது.
பலத்த பொலிஸ் காவலோடு பணம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். எனவே – மிகத் திட்டமிட்டு துணிச்சலான தாக்குதல் ஒன்றை நடத்தவேண்டும். சற்றுப் பிசகினாலும் திட்டம் தோல்வி அடைந்துவிடும். பணம் கொண்டு செல்லும் முறையையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஓரிரு தடவை கண்காணித்தனர். நடவடிக்கைக்கு தயாராகினர். பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை, சிறீ சபாரத்தினம், ஒபராய் தேவன் போன்ற முக்கியமானவர்களே நேரடியாக களத்தில் இறங்கினார்கள்.

தாக்குதல்

வாகனங்கள் பணத்தோடும் பொலிசாரோடும் வந்தன. தாக்குதல் ஆரம்பமானது. பாதுகாப்புக்கு வந்த பொலிசார் கொல்லப்பட்டனர். பணம் போராளிகளது கைக்கு வந்தது. 1981ம் ஆண்டு நடைபெற்ற அந்த கொள்ளை நடவடிக்கையே இலங்கையில் நடைபெற்ற மிகப் பெரிய கொள்ளை என்று அப்போது வியக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் பெறுமதி 82லட்சம் ரூபாய்கள். அப்போது இது மிகப் பெரிய தொகை.
இலங்கை அரசு திகைத்துப் போனது. யாழ்ப்பாணம் எங்கும் தேடுதல் வேட்டை நடத்தியது. 82லட்சம் ரூபாய் பணத்தோடு யாழ் திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இருந்த ஒபராய் தேவன் வீட்டில் மறைந்து இருந்தனர் குட்டிமணி, தங்கத்துரை பிரபாகரன் குழுவினர்.

“தாக்குதல் நடவடிக்கையின் போது பொலிசார் ஒருவரது துப்பாக்கி பிரபாகரனை குறிபார்த்தது. அதனைக் கண்டுவிட்ட சிறீசபாரத்தினம் தனது துப்பாக்கியால் அந்த பொலிஸ்காரரைச் சுட்டார். இல்லாவிட்டால் பிரபாகரன் கதை முடிந்திருக்கும்.” இது நீர்வேலிக் கொள்ளையின் பின்னர் குட்டிமணியால் கூறப்பட்ட சம்பவம்.

சிறீ சபாரத்தினம் உயரமாக இருப்பார். அதனால் ரோல் சிறீ என்று இயக்க வட்டாரங்களில் அழைக்கப்பட்டார். நீர்வேலி வங்கிக்கொள்ளை நடவடிக்கையைப் பற்றிய விசாரணைகளிலிருந்து புலனாய்வாளர்கள் சில தகவல்களை கண்டறிந்தனர். பிரபாகரன்,குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் தீவிரமாகத் தேடப்பட்டனர். ‘நீர்வேலி வங்கிக்கொள்ளைப் பணம் பிரபாகரனிடம்’ என்று பொலிசார் தெரிவித்த செய்தி பிரபாகரனின் சிறுவயதுப் புகைப்படத்தோடு பத்திரிகைகளில் வெளிவந்தன.
தங்கத்துரையின் திருமணம்
தேடுதல் வேட்டை தீவிரமானதால் தமிழ்நாட்டில் சென்று தங்கிருக்கலாம் என்று குட்டிமணி-தங்கத்துரை ஆகியோர் முடிவு செய்தனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது தங்கத்துரையின் இதயத்தை திருடிவிட்டார் ஒரு பெண்.
அவரது பெயர் நவமணி – பி.ஏ.பட்டதாரி. 1980ம் ஆண்டு தங்கத்துரைக்கும் நவமணிக்கும் தமிழ்நாட்டில் திருமணம் நடந்திருந்தது. மனைவியைத் தமிழகத்தில் விட்டு தாயகம் வந்த தங்கத்துரை கடமையைச் செய்துவிட்டு தலைமறைவு வாழ்க்கைக்காக மீண்டும் தமிழகம் செல்லத் தயாரானார். கடற்கரையில் படகு தயாராக காத்து நின்றது. கடற்கரை மணலில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
திடீரென்று அங்கே வருகிறது பொலிஸ் படை. எதிர்த்துப் போராடும் தயார் நிலையில் இல்லை. எதிர்பாராத சம்பவம்.மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்தபோது பொலிசாருக்கு விசயம் தெரியாது. தலைக்கு 5லட்சம் விலை வைத்து தேடப்பட்டவர்களையே தாம் கைது செய்திருக்கின்றோம் என்பது பொலிசாருக்கு தெரியாது.
மூன்று கடத்தல்காரர்கள் சிக்கியிருக்கின்றார்கள் என்றே பொலிசார் நினைத்தார்கள். இன்ஸ்பெக்டர் நவரத்தினராசா தலைமையிலான பொலிஸ் கோஷ்டியினர் மூவரையும் கைது செய்தனர். பொலிஸ் நிலையத்திற்கு மூவரும் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கிருந்த பொலிஸ்காரர் ஒருவர் குட்டிமணியை அடையாளம் கண்டு கொண்டார். (குட்டிமணி முன்னர் 73ல் கைதாகி 76 ல் விடுதலையானவர்) நிலையத்திற்கு அப்போது தான் தம்மால் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை ஆபத்தானவர்கள் என்று கைது செய்த பொலிசாருக்கு தெரிய வந்தது. பொலிஸ் நிலையம் உஷாரானது. தகவல்கள் பறந்தன. உடனடியாக மூவரும் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குட்டிமணி –தங்கத்துரையை காட்டி கொடுத்துவிட்டு முழு வங்கி கொள்ளை பணத்தை ஆடையை போட்டுவிட்டு டேலோவில் இருந்து ஓடிய பிரபா 

குட்டிமணி –தங்கத்துரை ஆகியோர் படகில் ஏறுவதற்குச் செல்லும் நேரத்தில் பொலிசாருக்கு ஒரு தகவல் சென்றடைந்தது. கடத்தல் நடவடிக்கை ஒன்று நடக்கப்போவதாகவும் கடத்தல்காரர்களது நடமாட்டம் கடற்கரையில் இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தது. அந்த தகவலை யார் கொடுத்தார்கள்? நோக்கம் என்ன? என்பது இதுவரை விடை அறியப்படாத மர்மமாகவே இருந்து பிறகு இதற்க்கு காரணம் பிரபா என்று தெரியும் போது அவர்கள் உயிருடன் இல்லை.
கைது செய்யப்படும் முன்னரே குட்டிமணி – தங்கத்துரை குழுவினர் ‘தமிழ் ஈழ விடுதலை இயக்கம்’ என்ற பெயரிலேயே இயங்க ஆரம்பித்திருந்தனர். தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து முத்துக்குமாரசாவாமி தலைமையில் உருவாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செயலிழந்து போனது.அதனால் அந்தப் பெயரையே தமது இயக்கத்திற்கு சூட்டிக்கொண்டனர் குட்டிமணி, தங்கத்துரை குழுவினர்.
குட்டிமணி- தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்ட பின்னர் சிறீ சபாரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
நீதிமன்றத்துக்கு  அழைத்துச் செல்லப்படும் தங்கதுரை
தமிழீழ இராணுவம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில்  இருந்து ஒபரோய் தேவன் பிரபாகரனோடு வங்கி கொள்ளை பண விஷயத்தில் முரண்பட்டார். அவர் தனித்து வெளியேறி சென்னையில் இருந்த ஈபிஆர்எல்எவ் தலைவர் க.பத்மநாபாவோடு சேர்ந்து கொண்டார்.
ஒபரோய் தேவனை ஈபிஆர்எல்எவ் உறுப்பினராக சேர்;த்துக் கொள்வதை அப்போது சென்னையில் இருந்த ரமேஷ், சிவா போன்ற ஈபிஆர்எல்எவ் முக்கிய உறுப்பினர்கள் எதிர்த்தனர். அதன் பின்னர் யாழ்ப்பாணம் திரும்பிய ஒபரோய் தேவன் தமிழ்ஈழ இராணுவம் (ரெலா) என்னும் அமைப்பை உருவாக்கினார்.
தனியார் கடைகளில் வீடியோ, டெக் போன்றவற்றை அவர் கொள்ளையடித்தாக பிரபாவால் செய்திகள் கசியவிட்டு அதனால் அவருக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை  சாதகமாக அமைந்தது. நீர்வேலி வங்கி கொள்ளை பணம் விடயம் அறிந்த எஞ்சி இருந்த ஒபரோய் தேவனை பிரபாவின் உத்தரவுப்படி 1983ல் புலிகள் யாழ்.நகரில் நீராவியடி என்னுமிடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். குட்டிமணி- தங்கத்துரை கைது செய்யப்பட்ட பின்னர் பிரபாகரன் தலைமையிலான புலிகளும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினரும் சில காலம் மட்டுமே சேர்ந்திருந்தனர்.

No comments:

Post a Comment