Tuesday, 28 June 2016

பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்: சில நினைவுகள், குறிப்புகள்

16/08/2015

இன்று ஆகஸ்ட் 16 –  சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.

எல்டிடிஇ தறுதலை விடுதலைப் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட பலப்பல மகத்தான 'தமிழ் ஈழத்' தலைவர்களில் இந்த சின்னபாலாவும் ('ஐயர் பாலா' அல்லது 'ஈரோஸ் பாலா' என்றும் அறியப்பட்ட) ஒருவர். (ஜூன் 6, 1957 - ஆகஸ்ட் 16, 2004)
எல்டிடிஇ தறுதலை விடுதலைப் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட பலப்பல மகத்தான ‘தமிழ் ஈழத்’  தலைவர்களில் இந்த சின்னபாலாவும் (‘ஐயர் பாலா’ அல்லது ‘ஈரோஸ் பாலா’ என்றும் அறியப்பட்ட) ஒருவர். (ஜூன் 6, 1957 – ஆகஸ்ட் 16, 2004)
…இரண்டு நாட்களாகவே மனம் ஒரு பிடியில் இல்லை. ஸ்ரீலங்கா தமிழர்கள் அமைதியாக வாழ, முன்னேற்றம் காண இருந்த/அமைந்த ஒவ்வொருசாத்தியக் கூற்றையும், அற்ப சுய நலத்துக்காக பேடித்தனமாக  அழித்த அந்த அயோக்கிய விடுதலைப் புலிகளையும், கொலைகாரப் பிரபாகரன்களையும் நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது.
நம் தமிழக இளைஞ அரைகுறைகள் பலர், ஒரு எழவையும் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல்,  ‘தமிழ் ஈழம் அமையும்’ என்றெல்லாம் இங்கேயேபாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு உளறிக்கொட்டுவது இன்னமும் வெறுப்பை வளர்க்கிறது.
இதற்குக் காரணம்: என் குறிப்புகளைப் புரட்டியபோது கிடைத்த, அசைபோட்ட, பலப்பல சோக நிகழ்வுகளில், ரேலங்கி செல்வராஜா குறித்த விஷயங்களும், மிகமிக முக்கியமாக, என் மரியாதைக்குரியவராக இருந்த ‘சின்ன பாலா’ பற்றிய செய்திகளும்தான். :-(
ஆக எழுத ஆரம்பிக்கிறேன். மகத்தான ஷங்கர் குஹா நியோகிகளை, ராஜனி திராணகமக்களை, கில்யஸ்களை, லக்ஷ்மண் கதிர்காமர்களை, சின்ன பாலாக்களை நான் எப்படி மறக்கமுடியும்?
-0-0-0-0-0-0-0-
பலப்பல வருடங்களுக்கு முன், 1980களின் நடுவில் நான் ஒரு ‘இளம்கன்று’ கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் – படிப்பறிவு மட்டும் ஓரளவு பெற்று உலக அனுபவங்கள் அவ்வளவாகப் பெற வாய்க்காத, பிரமைகளாலான இளம் பிராயத்தில் – மார்க்ஸிய சிந்தனைகளால், புரட்சிகர கருத்தாக்கங்களால், ஒட்டுமொத்த மானுடவிடுதலைப் பகற்கனவுகளால் ஆட்கொள்ளப்பட்டு இருந்த நாட்களில் – இவருடன் ஓரிரு முறை பேசியிருப்பவன் (=அதாவது,  அவருடைய சிறு நண்பர்குழாமுடன் அவர் பேசுவதைச் சிலமுறை, பெரும்பாலும் ஒரு ஓரமாக நின்றுகொண்டு கேட்டிருப்பவன்) என்கிற முறையிலும், சுமார் 15 வருடம் போலவாவது நேரடியாகவோ, சிலபல அறிமுகங்கள் மூலமாகவோ சின்னபாலாவின் செயல்பாடுகளை அறிந்துள்ளவன் என்கிற முறையிலும், நான் தயங்காமல் சொல்வேன்:
சின்னபாலா போன்ற பல மனிதர்கள், அந்தத் தறுதலைப் புலி பிரபாகரனை விட – படிப்பறிவும், மார்க்ஸீய சித்தாந்தப் பயிற்சியும், தலைமை தாங்கும் பண்பும், நேர்மையும், ராஜரீக அறிவும், தன்முனைப்பும்,  விசாலமான மனமும், மக்களின் மீது கரிசனமும், அடிப்படை மானுட விழுமியங்களின் மீது மதிப்பும் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் அனைவரும் பிரபாகர கூலிப்படையினர்களால் அழித்தொழிக்கப்பட்டார்கள்!
 சரி. சின்னபாலாவிடமும்  சிலபல பிரச்சினைகள் இருந்தன: இதையெழுதும் எனக்கு –  1) முழுமுதலாக, நான் ஒரு இந்தியன் என்கிற முறையிலும், 2) ஈரோஸ் அமைப்பின், அபுஜிஹாத் எனும் கொலைவெறி பாலஸ்தீனிய இயக்கச் சார்பினாலும், 3) பிரபாகரன்-உமா மஹேஸ்வரன் போன்ற உதிரிகளுக்கு ஈரோஸ் கொடுத்த பயிற்சியாலும் 4) அவரால் அந்தசமயத்தில் சரியாக எனக்கு விவரிக்கமுடியாத / வெளிக்கொணரமுடியாத உள்ளுறை இந்திய எதிர்ப்புக்கான காரணங்களாலும், மிதவாதப் போக்குகளை மதிக்காத தன்மையாலும் — அவர் சார்ந்திருந்த இயக்கத்தின்மீது விமர்சனம் இருந்தது;   நான் அவதானித்தபடி, அவருடைய இயக்கப் பிறழ்வுகளால்  எழும்பியவை அந்தப் பிரச்சினைகள்!
…இருந்தாலும் – அவரிடம் சர்வநிச்சயமாக  இல்லாமல் இருந்தது – கொலைவெறியும், துப்பாக்கிமுதல்வாதமும், அற்பத்தனமும்; அதனால்தான் பிரபாகரன்களால் கொலை செய்யப்பட்டார்!
இம்மாதிரி ஒரு உரையாடலில், அவர் கிட்டு, திலீபன், பிரபாகரன் போன்றவர்களின் சிலபல செயல்பாடுகளைப் பற்றி – கிண்டலாக அல்ல, ஒரு விரக்தியடைந்த விமர்சன மனப்பான்மையுடன், சன்னமான குரலில், உணர்ச்சிவசப்படாமல் மிகத் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
இந்த கிட்டு (இவர்தான் பிரபாகரன் சார்பாக, பிற இயக்க இளைஞர்களை, பல அப்பாவிக் குழந்தைகளை இரக்கமில்லாமல் கொன்றவர்!  ஊக்க போனஸாக, பிரபாகரனுக்குப் போட்டியாக இருந்த விடுதலைப் புலிகளையுமேகூட ஒழித்தவர்!), திலீபன் (இந்த அற்ப விடலை இளைஞர்தான் பிற்காலத்தில், உண்ணாவிரத பாவ்லா செய்து, வேறுவழியில்லாமல்போய் புலி()!களால் அச்சுறுத்தப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்டு – நாடகம் நிஜமாக மாறி, பலிகடாவாகச் செத்தவர்!) போன்ற புலிக்குஞ்சாமணி மாக்களின் – 1) தங்கள் சொந்த ஈழத்தமிழ் மக்கள் பற்றிய மட்டரகமான கருத்துகள் பற்றி, 2) எப்படி ஈழத் தமிழர்களை  ஏமாற்றவேண்டும் என்பதை மட்டுமே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தது/பேசியது பற்றி, 3) புலிகள் ஈழமக்களை எலிகளுக்குச் சமமாக மட்டுமே மதித்தது பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்…
பிரபாகரனின் ஹிட்லர் வழிபாட்டையும், ஜெர்மனியின் நாட்ஸிகள் வளர்ந்தவிதத்திலேயே விடுதலைப்புலிகளும் வளர்த்தெடுக்கப்படவேண்டும் எனும் பிரபாகர ஹிட்லரியத்தையும், நாட்ஸி (=’நாஜி’) வழிமுறைகளை வரைமுறையில்லாமல் காப்பியடித்தலையும் – அந்த பிரபாகர லும்பன், நாட்ஸி கைவிரைப்பு வெறி ஸல்யூட் முறையைக்கூட வலுக்கட்டாயமாக, தன் இயக்கத்தில் செயல்படுத்தியமை பற்றியும்…
இவை அனைத்தைப் பற்றியும் – வெறுப்பில்லாமல், கொஞ்சம் தளர்வடைந்த சிரிப்புடன் மட்டும்  – மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார்… (குறிப்பு:லும்பன், ஹிட்லரியம், புலிக்குஞ்சாமணிகள் போன்றவையெல்லாம் என் வார்த்தைகள் – அவர் அவற்றை உபயோகிக்கவில்லை!)
…ஆனால் – ‘விடுதலை’ இயக்கங்களின் கயமைத் தலைமைகள் மீது வெறும் விமர்சனம் வைப்பதை மட்டும் செய்யவில்லை அவர். பரந்துபட்ட மக்களை அரவணைத்தல் – அவர்களது ஆசைகளை, தேவைகளை அமைப்பின் மூலமாக ஒருங்கிணைத்து மேலெழும்பிச் செல்வது எப்படி – இனமைய வாதங்களின் (ஈழத்தமிழ் முதல்வாதம் உட்பட) அடிப்படை ஃபாஸ்ஷிஸ்ம் – அதனைக் கல்வி+களப்பணி மூலம் எதிர்கொள்வது எப்படி எனப் பலப்பல விஷயங்களையும் தொட்டுக்கொண்டிருந்தார் என நினைவு. (இதைப் பற்றியெல்லாம் பின்னொரு நாள், சாவகாசமிருந்தால் எழுதுகிறேன்)
-0-0-0-0-0-0-
இப்போது சுருக்கமாக, ‘சின்ன பாலா’ பற்றிய என் விவரணைகளை, அவர் சார்ந்திருந்த ஈரோஸ், பின்னர் ஈபிடிபி போன்ற பின்புலங்களினூடே கொடுக்கிறேன்:
  • யாழ்ப்பாணத்தில் 1957ல் பிறந்த அவர், ஒரு பிராம்மண-ஆசிரியக் குடும்பத்தைச் சார்ந்தவர்.  அவருடைய 15 வயதிலிருந்தே அரசியல் சமுதாய ஈடுபாடுகளில் முழுமூச்சாக முனைந்தவர்.
  • அவரோ, அவர் குடும்பத்தினரோ யாழ்ப்பாண மேட்டிமையையோ, ஜாதி-மத ரீதியான அற்பத்தனத்தையோ உயர்த்திப் பிடிக்காதவர்கள். அவர்கள் மூட நம்பிக்கைகளுக்கும், தீண்டாமை உள்ளிட்ட அயோக்கியக் கொடுமைகளுக்கும், பழமைமுதல்வாதங்களுக்கும், பத்தாம்பசலித்தனங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டவர்கள். பெண்ணுரிமைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் போராடியவர்கள்.  பலப்பல சமூகங்களைச் சார்ந்த மக்களை அரவணைத்தவர்கள்.
  • இப்படி ஆயிரம் கல்யாணகுணங்கள் இருந்தாலும் பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல், கருமமே கண்ணாக இருந்திருக்கிறார்கள். பிரபாகரன்களைப் போல சொந்தத் தமிழ்க் குழந்தைகளைக் கூடக் கயமையுடன் கொன்றுகொண்டு வெறியுடன் எக்காளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருப்பவர்களில்லை அவர்கள்!
  • 1975ல் (அப்போது சின்னபாலாவுக்கு 18 வயதுதான்!) மற்ற சகபயணிகளுடன்  சேர்ந்து ஈரோஸ் (ஈழ மாணவர்களின் புரட்சிகர அமைப்பு – Eelam Revolutionary Organization of Students) எனும் அமைப்பை உருவாக்கி அதன் தொடங்கிகளின் குழுவில் முழுமூச்சாக வேலைசெய்தார்.
  • சின்னபாலா போன்ற அழகான ஆசாமிகள் இருந்ததால்தான் — அனைத்து ஆயுதமேந்தி ‘ஈழ’ இயக்கங்களிலும் –  இந்த ஈரோஸ் மட்டுமேதான், சிந்தாந்த ரீதியில் நெடுநாள் நோக்கில் மக்கள் முன்னேற்றத்தைப் பற்றிய, விடுதலை பற்றிய கவலைகளுடன், செயல் திட்டங்களுடன் காத்திரமாக மக்களைத் திரட்டுவதில்/ஒருங்கிணைப்பதில் ஈடுபட்ட ஒன்று.
  • இதில் பலப்பல படிப்பாளிகள் இருந்தார்கள்; ஆகவே ஈரோஸினால் பல முன்னோடி முனைவுகள் ஆத்மார்த்தமாக முன்னெடுக்கப்பட்டன. ஒரு எடுத்துக்காட்டாக – இந்த ஈரோஸ் தான் ஸ்ரீலங்கா முஸ்லீம்களின் நிலையைப் புரிந்துகொண்டு அவர்கள் மீட்சிக்காகவும் செயல்திட்டங்களை வைத்திருந்தது. அவர்களை ஒருங்கிணைத்து தம் அமைப்பில் ஈடுபடுத்தியது.
  • 1975-77 வாக்கில் அபுஜிஹாத் (“ஜிஹாதின் குழந்தை” எனும் பாலஸ்தீனிய பயங்கரமுதல்வாத அமைப்பு) அரைகுறைகளுடன் ஈரோஸ் தொடர்பேற்படுத்திக்க்கொண்டு தம்முடைய சில தொண்டர்களை அங்கே பயிற்சிக்காக அனுப்பியது. ஸ்ரீலங்காவிலேயே பயிற்சி முகாம்களை நடத்திய ஈரோஸ்தான் – அந்த அயோக்கியப் பிரபாகரனுக்குமேகூட அடிப்படை ராணுவப் பயிற்சியை அளித்தது. டெலொ, ப்ளோட், ஈபிஆர் எல் எஃப் உட்பட பல அமைப்புகள் சார்ந்த தொண்டர்களும் ஈரோஸ் முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களே!  (நான் அறிந்தவரை சின்னபாலா இந்த பாலஸ்தீனிய பயிற்சிகளுக்குச் செல்லவில்லை; ஆனால், தராதரம் பார்க்காமல் கண்டகழுதைகளுக்கும் ஆயுதப் பயிற்சியளித்த ஈரோஸ் மீது எனக்கு மாளாப் பிரச்சினை!)
  • 1983-85 வாக்கில் சின்னபாலாவும் இந்திய ராணுவத்தினால், இந்தியாவில் கொடுக்கப்பட்ட ஆயுதப் பயிற்சிகளில் பங்கேற்றார். பிரபாகர உதிரி கும்பல்களும் இம்மாதிரி பயிற்சி பெற்றன. (இந்த கேடுகெட்ட விஷயத்தை இந்தியா செய்திருக்கவேகூடாது என்பது என் கருத்து; இதற்காக, ஒரு இந்தியன் என்கிற முறையில், நான் வெட்கித் தலைகுனிகிறேன். இந்த வரலாற்றுத் தவறினால் – இந்தியா வளர்த்த பிரபாகரக் கடாக்கள் இந்திய மாரிலேயே பாய்ந்து பலப்பல இந்தியக் குடிமகன்களின் உயிர்களை மாய்த்தது (ராஜீவ்காந்தி உட்பட! ஆயிரத்துக்கும் மேலான இந்திய உயிர்கள் உட்பட!!) நம் மகாமகோ வரலாறு அல்லவா!)
  • ஜூலை-ஆகஸ்ட் 1985 வாக்கில் – இந்திய அரசின் முனைப்பினால் நடந்த திம்பு(புடான்) பேச்சுவார்த்தைகளில் ஈரோஸ் சார்பாக, சின்னபாலாவும் கலந்துகொண்டார். (பிரபாகரன், இந்தப் பேச்சுவார்த்தையின்போது கூட அழிச்சாட்டியம் செய்து, ஒரு சிறுபிள்ளையைப்போல முதிர்ச்சியற்று விடலைத்தனமாக நடந்துகொண்டது, ஒத்திசைவைப் படிக்கும் சில வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்)
  • ஆனால், ஈரோஸ் ஒரு ஆயுதம்தரித்த குழுவானாலும், தீவிர துப்பாக்கிமுதல்வாதத்தை முன்னெடுக்கவில்லை. பின்னர் இந்திய அமைதிப்படை, உட்போர்கள், அழித்தொழித்தல்கள் என நடந்து பிரபாகரன்கள் மேலேழும்பி வரும்போது 1990ல் ஈரோஸில் ஒரு பெரிய பிரிவு பாலகுமார் தலைமையில் எல்டிடிஇ கும்பலுடன் ஜோதியில் கலந்தது.
  • இதனுடன் எல்டிடிஇ-இல் ஐக்கியமாகி அதன் செய்திப்பத்திரிகை குழுவில் சேர்ந்தார், சின்னபாலா; ஆனால் – தறுதலைப் புலிகளின் அயோக்கியத் தன்மையை, அதன் தலைமையின் கயமையை, மக்களிம் முன்னேற்றத்துக்கு எதிரான ஃபாஸ்ஷிஸ்ட் போக்கை நன்கு அறிந்த சின்னபாலா முழுவதுமாக அந்த ஜோதியில் கலக்கவில்லை. இருந்தாலும்,  தறுதலைகளின் பிடியில் இருந்து அவர் தப்பித்து வெளியேற 1995 போல ஆகிவிட்டது.
  • பின்னர் அவர் ப்ளோட் அமைப்பில் சில நாள் இருந்து, பின்னர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி அமைப்பில் சேர்ந்து சில தேர்தல்களிலும் வென்றார்; . பின்னர் அதன் செய்தித் தொடர்பாளராக, ஊடகக் காரியதரிசியாகப் பலவருடம் இருந்தார். ஜனநாயகத்துக்காகவும், மக்களின் மேன்மைக்காகவும் ஆகவே எல்டிடிஇ கும்பலுக்கு எதிராகவும் குரலெழுப்புதலையும், முன்னெடுப்பகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்… (இதனைப் பற்றி, பலப்பல விவரங்கள் இருக்கின்றன; யாராவது, இது தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதக் கூடுமானால், என் குறிப்புகளைத் தரமுடியும்)
  • எனக்குத் தெரிந்து, சின்னபாலா ஆயுதத்தை ஒருபோதும் உபயோகித்தவரில்லை. அவரது எழுத்துகள்தான், முற்போக்குச் சிந்தனைகள்தாம், மேலும் முக்கியமாக, அவரது களச் செயல்பாடுகள்தாம் அவருடைய ஆயுதம்.
  • ஆகவே போய்ச் சேர்ந்தார். அதாவது தறுதலைப் புலிகளால் அழித்தொழிக்கப்பட்டார்!
சுபம்.
சின்னபாலா – மேலதிகமாக,  ஒரு கவிஞரும், கதாசிரியரும், பத்திரிகையாசிரியரும் கூட! இவர் எழுதிய சில கட்டுரைகளையும் ஒரு புத்தகத்தையும் (திம்பு முதல் டோக்கியோ வரை: புலிகளின் பேச்சுவார்த்தைகளும் பயன்பெறாத தமிழ்மக்களும்) படித்திருக்கிறேன். இவருடைய கவிதைகள் சுகமில்லை; சிறுகதைகள் பரவாயில்லை. ஆனால் ஆத்மார்த்தமான விழைவுகளும் அவதானிப்புகளும், நுணுக்கமான பார்வைகளும் கொண்ட அவருடைய கட்டுரைகள் மிகமிகமுக்கியமானவை.
சின்னபாலாவின் மனைவியும் அவருடைய மூன்று குழந்தைகளும் கஷ்டஜீவனத்தில்தான் இருந்தார்கள் எனக் கேள்வி.  இப்போது, அக்குழந்தைகள் வளர்ந்திருக்கவேண்டும்…
-0-0-0-0-0-0-
நான் இப்பதிவின் ஆரம்பத்தில் எழுதிய பிரபாகரன்-சின்னபாலா பொருத்திப்பார்த்தலுக்கு, விரித்த சித்திரத்துக்கு ஒருமாதிரியான ஒத்திசைவுடன் –  என் மதிப்புக்குரிய பத்திரிகையாளரும் ஸ்ரீலங்காவிலிருந்து தேசம்மாறி கனடாவில் வசித்துக்கொண்டிருப்பவருமான டேவிட் ப்யூவல் சபாபதி ‘டிபிஎஸ்’ ஜெயராஜ் அவர்களும்  தம் கருத்தைத் தெரிவிக்கிறார்.
"Sinna Bala has been interlinked with the evolution and growth of the Tamil militant nationalist movement from its pioneering days. He has a history that is equal if not more to that of LTTE Leader Velupillai Pirapaharan. Sinna Bala has to a very great extent personified the various stages and phases of the course of Tamil political struggle."
“Sinna Bala has been interlinked with the evolution and growth of the Tamil militant nationalist movement from its pioneering days. He has a history that is equal if not more to that of LTTE Leader Velupillai Pirapaharan. Sinna Bala has to a very great extent personified the various stages and phases of the course of Tamil political struggle.”
அதாவது, என்னுடைய மொழி’பெயர்த்தலில்’:
‘தமிழ் ஈழ’ தேசிய தீவிரவாத இயக்கங்களில் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் – அவற்றின் ஆரம்ப நாட்களிலிருந்தே தொடர்புள்ளவராக இருந்திருக்கிறார், சின்ன பாலா; அவருடைய வரலாறு என்பதுகுறைந்தபட்சம் பிரபாகரனின் வரலாறுக்குச் சமமானது, அல்லது மேலானது. சின்னபாலா, பலவிதங்களில் – தமிழ் அரசியல் முனைவுகளின் பல படிகளை, போக்குகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்.

 https://othisaivu.wordpress.com/2015/08/16/post-539/

No comments:

Post a Comment