ஈழ போராளியின் ஈரமனமும் கோரமரணமும்
இந்திய அமைதிபடை ஆக்கிரமிக்கவோ அல்லது கற்பழிப்பதையோ நோக்கமாக கொண்டு ஈழத்தில் காலடி எடுத்துவைக்கவில்லை, பலவிதமான உலக நெருக்கல்கள், ஐ.நா அமைதிபடையோ அல்லது அமெரிக்க படையோ இலங்கையில் காலூன்றுவதை தடுக்க அவசர அவசரமாக செய்யபட்ட ஏற்பாடு.
இலங்கையில் அமைதி திரும்புவதை பெரிதும் விரும்பிய பத்மநாபா, இந்திய படையினரோடு அமைதி திரும்ப கடும் ஒத்துழைப்பு கொடுத்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தபடி இலங்கையின் 4 மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயக நிலமென்றும், அது இரண்டையும் இணைத்து ஒரே மாகாணமாக்கி ஒரு முதல்வரையும், அதாவது "தமிழ்" முதல்வரையும் வைக்கவேண்டும் என ஏற்பாடாகி இருந்தது.
இப்படியாக வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழமாநிலம் உண்டாயிற்று.
அதாவது இந்தியாவில் தமிழ்நாடுபோல இலங்கையில் ஈழம், அதுவரை கிடைக்காத ஈழமாநில அந்தஸ்து, இந்தியாவால் அந்நேரம் உதவகூடிய ஆக உச்சகட்ட உதவி அவ்வளவுதான், காரணம் உலக காலநிலை அப்படி.
வங்கம் பிரிந்த்தால் அடிபட்ட பாம்பாக உறுமிய பாகிஸ்தான், அப்பாம்ம்பிற்கு பால்வார்க்கும் அமெரிக்கா எல்லாம் எப்படியாவது காஷ்மீரை பிரித்தெடுக்க கங்கணம் கட்டிகொட்டு விரதமிருந்தன.
ஆனால் புலிகளுக்கு பிடிக்கவில்லை, மக்களில் ஒரு பிரிவினருக்கும் பிடிக்கவில்லை, ஆண்டவனுக்கும் அவர்களுக்கும் மட்டுமே காரணம் தெரியும்.
இன்றும் தமிழ்தேசியம் பேசுவோர், குதிரைக்கு அடியில் சிலைவைப்போர், முஷ்டி முழக்குவோ, அண்ணனே...... என கதறுவோர் இவர்கள் யாரிடமாவது ஏன் ஈழத்தில் வடக்கு தமிழரையும், கிழக்கு தமிழரையும் இணைக்ககூடாது என கேளுங்கள், பதிலிருக்காது.
யாரிடமும் இருக்காது, இவர்கள் புரிந்துகொண்டது யாழ்பாணம், ஈழம்,பிரபாகரன், இந்தியா,சோனியா, கலைஞர் (இப்பொழுது கனிமொழி) துரோகம் அவ்வளவுதான், அதனை தாண்டி யோசிக்கமாட்டார்கள்.
வடக்கும் தமிழர்கள், கிழக்கும் தமிழர்கள் இரண்டையும் இணைத்தால்தான் என்ன? அது கூடாதாம். தனி ஈழம் வேண்டுமாம் அதில் இரண்டு மாநிலமும் தனி தனியாக இருக்குமாம்.
டெல்லிக்கு இது மிகவித்தியாசமாக தெரிந்தது, வாய்விட்டு கேட்டார்கள், "நாளை ஈழம் அமையும் பட்சத்தில் இரண்டு ஈழமாக அமைப்பீர்களா?" யாரிடமும் பதில் இல்லை.
ஈழம்தானே, தனி தமீழீழம் தானே, அதில் என்ன கிழக்கு வடக்கு பிரிவினை? என கேட்டால் யாரிடமும் பதில் இல்லை.
புலிகள் இதனை ஏற்க மறுத்தார்கள், மக்களில் ஒரு ஆதிக்கபிரிவும் அவர்களோடு இணைந்தது, விளைவு ஈழம் இந்தியாவின் வியட்நாம் ஆயிற்று. புலிகள் இந்தியராணுவம் மோதல் தொடங்கியது.
புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக நினைத்துத்தான் இந்திய ராணுவம் களத்தில் சும்மா குதித்தது, அதன்பின் புரிந்துகொண்டது இந்திய ராணுவத்தை விட புலிகளிடம் இருக்கும் தொலைதொடர்பு வசதியும், சில வெடிமருந்துகளும் மிக நவீனமானவை. ஒரு பெரிய அரசாங்க ராணுவ தயாரிப்பு, அந்த அரசின் அனுமதி இல்லாமல் இவை புலிகளுக்கு கிடைத்திருக்காது, ஆனால் அந்த நாடு ஜெயவர்த்தனேவின் இலங்கை அல்ல.
சுதாரிப்பதற்குள் இந்திய ராணுவம் அடிமேல் அடிவாங்க ஆரம்பித்தது, கழுகு வழிகாட்ட புலி பாய்ந்தது, ஒரு பக்கம் உலகெல்லாம் ஊடகங்கள் இந்தியராணுவம் கற்பழிப்பில் ஈடுபடவே வாத்சாயனர் புத்தகங்களை எல்லாம் கொண்டு சென்றார்கள் எனும் அளவிற்கு உலகெல்லாம் போட்டுதாக்கின.
ஒரு செய்தி 10 ஆக்கபட்டது, களநிலமை இந்திய ராணுவத்திற்கு புதிது. ராணுவ யுத்தம் தெரியுமே தவிர கொரில்லா யுத்தம் பழக்கபடாதது. ரோந்துவரும் இந்திய கவசவாகனத்திற்கு சந்தோஷாக கைகாட்டும் பாட்டி, வாகனம் கடந்தபின் சுருக்குபையில் இருக்கும் ரிமோட்டை இயக்கி கன்னிவெடியை இயக்கி வாகனத்தை தூள் தூளாக்கினால்..
பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் அல்லது சிறுவர் (100 பேரில் ஒருவர்) எங்கு ஆயுதம் வைத்திருப்பார்கள் என தெரியாது, திடீரென சாலை சோதனையில் ஈடுபடும் இந்தியராணும் மீது கை குண்டு விழும்.
இப்படியாக பாதிக்கபடும் ராணுவம் அந்தபாட்டி கூட்டத்தையும், மாணவி கூட்டத்தையும் விசாரித்தால், அய்யகோ கற்பழிக்கும் கொடுமை பாரீர் என உலகெல்லாம் மீடியாக்கள் அலறும்.
5000பேர் தங்கும் மருத்துமனையில் ஒரு புலி சென்று படுத்துகொள்வார், சாலையில் செல்லும் இந்தியராணுவத்தை தாக்குவார். இந்தியராணுவம் மருத்துவமனையில் நுழையும், எங்கிருந்தோ குண்டு விழும், சகலமும் பஸ்பம்.
யாழில் மருத்துவமனை தகர்ப்பு, இந்தியபடை அட்டூழியம் என செய்திவரும், எல்லா ஊடகங்களும் அப்படித்தான் எழுதி தள்ளின, உண்மை வெகு தூரத்தில் இருந்தது.
சதாம் உசேனையும், மூமர் கடாபியையும் உலக வில்லன்கள் ஆக்கினார்கள் அல்லவா? போராளி யாசர் அராபத்தை தீவிரவாதி ஆக்கினார்கள் அல்லவா அப்படி.
இந்தியராணுவம் அடிவாங்க, புலிகளுக்கும் பாதிப்பு இருக்க, தமிழர்களும் மகா சிக்கலில் மாட்ட அப்பொழுது மிக பாதுகாப்பாக இருந்துகொண்டு செத்தவர் கணக்ககை குறித்துகொண்டிருந்தது இலங்கைராணுவம், அவர்களுக்கென்ன யார் செத்தாலும் சரி, இந்திய வீரனோ புலிகளோ இல்லை அப்பாவி தமிழரோ யார் செத்தாலும் மகிழ்ச்சி. அப்படித்தான் இருந்தது நிலை.
ஆனாலும் அவமானத்தோடு போராடிய இந்தியா, வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்திற்கு முதல்வருக்கு தேர்தல் நடத்தியது, புலிகள் தேர்தலில் நிற்கவில்லை (என்றுதான் அவர்கள் மக்கள்முன் நின்றார்கள்?), புலிகளுக்கு பயந்தும் யாரும் நிற்கவில்லை.
ஆனால் பத்மநாபா துணிந்து நின்றார், அந்த தேர்தலில் மகத்தான வெற்றியும் பெற்றார், மக்களின் ஆதரவு அப்படி. ஆனாலும் பதவியை தனது கட்சிக்காரர் வரதராஜ பெருமாளிடம் ஒப்படைத்துவிட்டு மக்கள் பணியிலே இருந்தார்.
பத்மநாபாவும், வரதராஜபெருமாளும் அழிக்கவேண்டிய அசுரர்களாக புலிகள் குறித்துகொண்டனர்.
30 ஆண்டுகாலம் தனிபோராட்டம் நடத்திய அராபத் இப்படித்தான் பாலஸ்தீன் சுயாட்சிக்கு ஒப்புகொண்டார், பெரும் அதிகாரம் இல்லைதான். ஆனால் வகுத்து வைத்த எல்லைகோடு இருக்கின்றது. காசாவும் மேற்குகரையும் பாலஸ்தீனருக்கு எனும் அடையாளம் இருக்கின்றது. இஸ்ரேல் எப்படியெல்லாம் நாடகமாடினாலும் அதனை அழிக்கமுடியவில்லை, முடியவும் முடியாது.
நாளை பாலஸ்தீனம் மலரும் பட்சத்தில் சிக்கல் இல்லை, இதனைத்தான் அன்றே ஈழத்தில் பத்மநாபா சொன்னார். இதுதான் தொலைநோக்கு,சாதுர்யம், வாய்பினை பயன்படுத்திகொள்ளும் சூட்சுமம்.
இன்று பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லீம்களை போட்டு விரட்டுகின்றனர்? எந்த உலகநாடு உள்நுழைத்திருக்கின்றது? ஒருவருமில்லை இப்படித்தான் ஈழநிலையும் இருந்தது, ஆனால் இந்தியா நுழைந்தது. அதனை விரட்டினார்கள் இந்தியா ஒதுங்கி கொண்டது.
இந்திய வழிகாட்டலில் ஈழமாகாணத்தை முன்னேற்றும் திட்டத்தில் கடுமையாக பத்மநாபா உழைத்துகொண்டிருக்கும் பொழுதுதான், பிரேமதாச அதிபர் ஆனார்.
எந்த சிங்கள ராணுவத்தை எதிர்த்து புலிகள் துப்பாக்கி தூக்கினார்களோ அந்த ராணுவத்தோடு இணைந்துகொண்டார்கள். (இதுதான் மேதகு தேசியதலைவரின் வழிகாட்டல்)
தனக்கு ஆகாதவர்கள் யாராயினும் ஒழித்துகட்டும் புலிகள், பத்மநாபாவிற்கு தற்கொலை போராளியை குண்டைகட்டி அனுப்பினார்கள். பத்மநாபாவை சந்திக்கும் முன் அவர் அகப்பட்டுகொண்டார், அவரை கொல்லும் நோக்குடன் துப்பாக்கி தூக்கியவர்களை தடுத்து சொன்னார் நாபா.
"நாம் உன்னை கொல்லமாட்டோம், நீனும் தமிழர்,நானும் தமிழர். உங்கள் தலைவரை போல எமக்கு தலமை ஆசையோ, உயிர்பயமோ இல்லை. சிங்களனுடனான போரில் என் உயிர் போகட்டும், தமிழன் கையால் இருக்க கூடாது" என மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினார் நாபா.
புலிகளுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தால் இந்த இடத்தில் எப்படி சிந்தித்து இருப்பார்கள்?, ஒரு பெரும் தூக்கு தண்டனை கைதி கூட சிந்தித்து பார்க்கும் இடம் இது, பத்மநாபா இவ்வளவு மகத்தானவரா? என்று ,புலிகளிடம் அதனை எதிர்பார்த்து என்ன செய்ய? சகதோழனின் கொலையில் தொடங்கிய இயக்கம் அது.
பத்மநாபாவோ மனிதர்களை நேசித்த மானிடநேயமிக்க போராளி
(இதே புலிதலமை என்ன செய்தது? 15 ஆண்டுகாலம் தன்னோடு இருந்த, தனக்கு அடுத்த தலமையான மாத்தையா மீது பொய்யான குற்றசாட்டு சொல்லபட்டபொழுது ஒப்பற்ற அர்பணிப்பான போராளியான மாத்தையாவை 500 போராளிகளோடு சுட்டுகொன்று எரித்தது)
தமக்கு பயிற்சியும்,பணமும்,உணவும்,இடமும் தந்த இந்தியாவினை புலிகள் மூர்க்கமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள், உலக நிலையும் மாற (ரஷ்யா சிதற்), இந்திய அரசியலும் மாற (விபி சிங்), தமிழகத்து அழுத்தமும் (திராவிட கழகங்கள், இன்று தமிழ்தேசியம் பேசுவோர் அன்று புலிகளுக்கு திராவிட இயக்கங்கள் செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டார்கள்) கூட, இந்திய ராணுவம் வாபசானது.
இந்திய உடன்படிக்கை செல்லாது என பிரேமதாசா அறிவித்தார், இணைந்த வடக்கு கிழக்கு மறுபடியும் இரு மாகாணமாக பிரிக்கபட்டது. புலிகளும் அந்த ஆளும் தமிழ் வர்க்கமும் ஒப்பற்றமகிழ்ச்சி அடைந்தது.
இந்திய ராணுவம் 1500வீரர்களை இழந்து அவமானத்தோடு வெளியேறிய இந்தியா பத்மநாபாவோடு சென்னை வந்தது, எதிர்காலம் தெரியாத நிலையிலும், கம்யூனிச தாய்வீடான ரஷ்யா சிதறிய நிலையிலும் சொன்னார்.
"உண்மை சாகாது, வன்முறை வெல்லாது, ஒருகாலம் நிச்சயம் ஈழமக்கள் அமைதியாக வாழ்வார்கள்"
வரதராஜபெருமாளை ராஜஸ்தானில் தங்கவைத்த இந்தியா, பத்மநாபாவை வடஇந்தியாவில் தங்குமாறோ அல்லது வெளிநாட்டுக்கு செல்லுமாறோ கேட்க சென்னையிலே வாழதுணிந்தார்.
பாதுகாப்பான வாழ்க்கைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் 1500 இந்தியவீரர்களை இழந்தும் புலிகளுக்கு இந்தியாவில் தடை இல்லா காலமது.
அன்னை இந்திரா டெல்லியில் ஒரு அரசுவிழாவில் தன் அருகில் அமிர்தலிங்கத்தை அமரவைத்து "ஏதோ" சொல்லவந்ததை குறித்துகொண்டபுலிகள் பின்னாளில் அவரை கொன்றார்கள், அதுவும் அவர் வீட்டிற்கு சென்று, அவர் மனைவி கொடுத்த தேநீரை குடித்துவிட்டு அப்பெண்மணியின் தாலியை அறுத்தார்கள், அவர்கள் பயிற்சி அப்படி.
ஈழதேர்தலில் வெற்றிபெற்ற பத்மநாபாவை விடுவார்களா? ஈழம் என்றால் புலிகள், ஆட்சி என்றால் புலிகள், மக்களாவது? தேர்தலாவது? ஜனநாயகமாவது?
பிரபாகரனே சொன்னார் ஒரு பத்திரிகையாளரின் இப்படியான கேள்விக்கு "சுதந்திர தமிழ்ஈழத்தில் எம்மாதிரியான அரசு அமையும் என சொல்லமுடியுமா?"
மேதகு சொன்னார் "நிச்சயமாக சர்வாதிகார ஆட்சிதான்"
பின்னர் எப்படி பத்மநாபாவை விடுவார்கள்? பலமுறை முயற்சித்தார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக பின்லேடனுக்கு கிடைத்த மூர்க்கமான மனிதாபிமானமே இல்லாத ரம்ஸி யூசுப் எனும் கோடூரமனம் படைத்தவரைபோல (பின்னாளில் பின்லேடன் ஒழிக்கபட்டதிற்கும் இவனே காரணம்) புலிகளுக்கும் ஒருவர் கிடைத்தார்.
இயக்கபெயர் பாக்கியநாதன், பத்மநாபாவை ஒழித்துகட்ட அவருக்கு இட்டபெயர் ரகுவரன். இரண்டு பெயர் உண்டே தவிர கண் ஒன்றே ஒன்றுதான்.
அவரேதான் அவர் பெயர் சாகும்பொழுது "ஒற்றைகண் சிவராசன்".
எவ்வளவு தந்திரமாக பத்மநாபாவை கொன்றோழித்தார்கள் என்பது தனிபதிவாக காணவேண்டியது, அவ்வளவு தந்திரமும்,நன்றிகெட்ட தனமும் நிறைந்த கொலை அது, இதே ஜூன் 19 1990ல் நடந்த கொலை அது.
பலத்த பாதுகாப்போடு சென்னையில் இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார்.
கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம்.
புலிகளின் தகவல் தொடர்பு, ஆயுதம்,பெட்ரோல், மருந்து என எல்லாம் டாஸ்மாக் சரக்குபோல மிக சரளமாக நடமாடிய நேரம். மத்திய அரசு புலிகளை முறைத்துகொண்டிருந்தபொழுதே கலைஞர் அரசு இதனை காணாமல்தான் விட்டு இருந்தது.
வரதராஜபெருமாளுக்கு மத்திய உளவுதுறை கொடுத்தபாதுகாப்பில் கொஞ்சம்கூட பத்மநாபாவிற்கு தமிழகத்தில் கொடுக்கபடவில்லை, பத்மநாபா அதை விரும்பவும் இல்லை.
இந்நிலையில் சிவராசன் அதாவது ரகுவரன் எனும் பெயருடன் வந்த ஒற்றைக்கண் சிவராசனுக்கு பத்மநாபாவை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டான், இன்னொரு காலில்லாத புலி உறுப்பினர் செயற்கைகால் பொருந்த ராஜஸ்தானுக்கு வந்ததாக சொல்லிகொண்டு வரதராஜ பெருமாளை தேடிகொண்டிருந்தார்.
சென்னையில் ஒரு இளம்புலி உறுப்பினரை அகதிகள் முகாமில் ஊடுருவ செய்தார் சிவராசன், அந்த புலியும் மிக பிரமாதமாக நடித்தது, அதாவது தான் அகதியாய் வந்ததாகவும், படிப்பை தொடரவிரும்புவதாகவும், கார்ல்மாக்ஸின் பேரனாக மாற இருப்பதாகவும் கண்டவர்கள் முன்னால் எல்லாம் புலம்பிற்று.
மிக பரிதாபகரமான தோற்றத்துடன் இருந்த அவரை சில ஈழ ஆதரவாளர்கள் கண்டு பத்மநாபா உனக்கு உதவுவார் என ஆறுதல் கூறி அழைத்துசென்றனர்.
வந்தவன் கோலத்தை கண்டு உணவிட்டார் நாபா, சென்னையின் மிக முக்கிய கல்லூரியில் செர்த்து படிக்கவும் வைத்து, செலவினை பத்மநாபாவின் இயக்கம் ஏற்றுகொள்ளும் எனவும் அறிவித்தார். அதோடு அந்த சந்திப்பு முடிந்தது.
"எம்மை ஆதரிக்காதவரெல்லாம் எமது எதிரிகள், அவர்களை உயிரோடு விடகூடாது, இரக்கம் கூடாது, கொல்... கொல்" என மனதை இறுக்கும் பயிற்சிபெற்ற புலிக்கு நன்றிஉணர்வு எப்படி இருக்கும்?
இரண்டாம் கட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகிய புலி, பத்மநாபா நெருங்கிய தோழர்களுடன் நடத்தபோகும் கூட்டம்பற்றி சிவராசனுக்கு சொல்லிவிட்டு பத்மநாபா குழுவினருடனே தேநீர் குடித்துகொண்டிருந்தது.
மிக துல்லியமாக "துரோக" புலி கணித்துகொடுத்த நேரத்தில் கோடம்பாக்கத்திற்கு வெள்ளை மாருதிவேனில் பயங்கர ஆயுதங்களோடு வந்த சிவராசன் குழு வாட்ச்மேனை (அது அடுக்குமாடி வீடு) கொன்று உள்புகுந்து பத்மநாபா உள்பட 17 பேரை கண நேரத்தில் சுட்டுகொன்று மின்னல்வேகத்தில் வெளியேறியது.
பெரும் கனவுகளோடு லண்டன் உல்லாச வாழ்க்கையை விட்டு ஈழத்திற்கு போராட வந்த அந்த மேதை கோடம்பாக்கத்தில் பிணமானார், அவர் சாம்பல் கூட அவர் நேசித்த ஈழத்தில் பரவ இறைவன் அனுமதிக்கவில்லை.
அவசரமாக வேதாரண்யம் சென்று தப்பிக்க சென்ற சிவராசன் மறித்த 3 போலிசாரை தாக்கி பின் கைதுசெய்யபட்டதும், உயர் அரசியல் அழுத்தங்களால் அவன் விடுவிக்கபட்டதாகவும் அதிகாரபூர்வமில்லா தகவல் உண்டு.
புலிகளின் தமிழ்க நடுமாட்டத்தை கடும் வெறுப்புடன் கண்காணித்த மத்திய அரசு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றாத தமிழக அரசு என அறிவித்து கலைஞர் அரசை டிஸ்மிஸ் செய்தது.
எம்.ஜி.ஆர் எனும் பெரும் சக்திக்குபின் அப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருந்த கலைஞருக்கு எப்படி இருந்திருக்கும்? மனிதர் அன்றே வெறுத்துவிட்டார், இவ்வளவிற்கு பத்மநாபா படுகொலை வழக்கு என்று ஒன்றோ அல்லது விசாரணை என ஒன்றோ கிடையாது.
அவ்வளவு சலுகை புலிகளுக்கு, வந்தார்கள் சுட்டார்கள், சென்றார்கள். இறந்ததில் 3 சென்னை தமிழரும் உண்டு.
பராரியாய் பாமரகோலத்தில் படிப்பிற்காய் வந்ததாக பத்மநாபாவை காட்டிகொடுத்த புலி பின் புலிகள் இயக்கத்தில் கவுரவிக்கபட்டது, சிவராசன் பெரும் ஹீரோவாக கொண்டாடபட்டார்.
கொன்றவர்கள் புலிகள்தான் என பலர் சொன்னபொழுதும் வழக்கம் போல புலிதலமை சொன்னது "எமது விடுதலையின் தடைகல் அகற்றபட்டது"
ஈழத்தின் படிக்கல்லான பத்மநாபாவை தடைக்கல் என வர்ணித்த புலிகள் அதன் பிறகும் திருந்தவில்லை, மிக சரியாக 11 மாதத்தில் ராஜிவ்காந்தியை வீழ்த்தினார்கள்.
தமிழகம் அவர்கள் விரும்பியவர்களை கொல்லும் காடாக மாறிற்று, பத்மநாபா கொலையோடு தமிழகத்தில் புலிகளை ஓடுக்கியிருந்தால் ராஜிவ் கொல்லபட்டிருப்பதை தடுத்திருக்கலாம் என்பதும் தியரி. பத்மநாபா கொலையில் ஒரு தடையோ கண்டனமோ பெறாத தைரியம்தான் அவர்களை ராஜிவ் வரை நீளச்செய்தது.
ராஜிவ் கொலை வழக்கு தீவிரமாக விசாரிக்கபடும் பொழுதுதான், பத்மநாபா கொலை உண்மையும் வெளிவந்தது. ஆனால் 1990ல் "ரா" முழு பத்மநாபா கொலை சிவராசன் சரித்திரத்தையே தெரிந்து வைத்திருந்ததை பின்னாளில் சிபிஐ இடம் கூடம் தெரிவிக்கவில்லை, இதுதான் "ரா".
தெய்வம் நின்று கொல்லும் அல்லவா?
அசட்டு தைரியத்தில், என்ன ஆட்டம் போட்டாலும் தமிழகம் பின்வரும் என்ற திமிரில் சிவராசன் ராஜிவை வீழ்த்த, மத்திய போலிசார் மிக திறமையாக உண்மைய கண்டறிந்தனர், சிவராசனும் தற்கொலை செய்துகொண்டான், பெரும் கொலைகாரனான அவன் ராஜிவ்கொலைக்குபின்னும் ராஜஸ்தானில் வரதராஜ பெருமாளை கொல்லும் திட்டத்தோடுதான் வடக்குநோக்கி நகர்ந்தான், அவ்வளவு வெறி.
நளியின் வாழ்க்கை, பேரரிவாளனின் பரிதாபம், அன்னை லூர்தம்மாளின் தீரா சோகம், தமிழக முழுக்க தி.க பிரமுகர்களுக்கு இன்றும் மறைமுக கண்காணிப்பு என எல்லா சோகங்களுக்கும் காரணகர்த்தா இந்த சிவராசன்.
ராஜிவ் கொலையோடு கொல்லபட்ட ஹரிபாபு, நமது பகுதி ஆ.திருமலாபுரத்துக்காரர் இன்ஸ்பெக்டர் ராஜகுரு குடும்பம் வரை இவனால் பாதிக்கபட்டது, பெங்களூரில் தனக்கு இடமளித்த ரங்கநாத்தின் குடும்பம் நாசமானது வரை இவரது சாதனை அல்லது "போராட்டம்" நீளும்.
சிவராசனாலோ அல்லது அந்த இயக்கத்தாலோ யாராவது ஒருவர் வாழ்ந்தார்களா? அல்லது வாழவைக்கபட்டார்களா? (தமிழக அரசியல்வாதிகள் திடீர் தமிழ்போராளிகளை விடுங்கள்) என்றால் இல்லை, நிச்சயம் இல்லை. ஆதரித்த அனைவரும் காலி, இதுதான் அவர்கள் சித்தாந்தம். அவர்களுக்கு ஆக்க தெரியாது, அழிக்கமட்டும் தெரியும்.
ஒவ்வொரு படுகொலையின் பொழுதும் "தடைகல் அகற்றம்" என சொல்லும் புலிகள், ராஜிவ் கொலைக்கு அதுவும் சொல்லவில்லை. இறுதிவரை கனத்த மவுனம்.
இப்படியாக யாரும் எமக்கு வேண்டாம், சகலரையும் எதிர்த்து ஈழநாடு அடைவோம் என சகட்டுமேனிக்கு கொலைகளை புலிகள் புரிந்தனர்.
முன்பு உயிர்காத்த பத்மநாபா, வடமராட்சியில் உயிர்காத்த ராஜிவ், மணலாற்றில் உயிர்காத்த பிரேமதாசா என வரிசைகட்டி துரோகதனமாக கொன்றுவிட்டு அவர்களுக்கு இவர்கள் வைத்தபெயர் "துரோகிகள்".
சபாரத்தினம், ராஜிவ்,பத்மநாபா,பிரேமதாசா என எல்லோரையும் வரிசைகட்டி கொன்றுவிட்ட பின்னும் புலிகளுக்கு 20 ஆண்டுகள் காலம் இருந்தது? என்ன சாதித்தார்கள்? ஒன்றுமில்லை.
"நீங்கள் ஒரு முடிவிற்கும் வரமாட்டீர்கள், நாட்டை உருவாக்கி துப்பாக்கி குழுவிடம் கொடுப்பது எவ்வளவு பெரும் விபரீதம், உலகம் இதனை ஒப்பாது, அரசியலுக்கு திரும்புங்கள்" என்று 23 வருடங்களுக்கு முன்பே இந்தியா சொன்னதன் விளைவு பத்மநாபா,ராஜிவ் படுகொலை.
காலசூழல் மாறுவதை கூட கணிக்காமல் முள்ளிவாய்க்காலில் முடங்கி கடைசி நொடியில் ஆயுதங்களை மவுனித்து சிங்களரிடம் சரணடைய சென்றார்கள்.
இவர்கள் தந்திரமாக பத்மநாபாவை சாய்த்ததை போல சிங்களம் அவர்களை நயவஞ்சகமாக சரித்து இயக்க கதையை முடித்தது,
ஆனால் பத்மநாபா கொலையில் அதாவது அவருக்கு பாதுகாப்பு கொடுக்காமல், கொலை குற்றவாளிகளை கண்டும் காணாமல் விட்டு செய்த பாவம் பின்னாளில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் கலைஞர் மீது பெரும் பழிச்சுமையாக விழுந்து கிடக்கின்றது, இதுதான் விசித்திரம்.
பத்மநாபாவின் நினைவுநாள் இன்று உண்மையான மானிடநேயமிக்க தமிழுணர்வாளருக்கு "ஈழதியாகிகள்" தினம். அந்தோ பரிதாபம் இந்த உண்மையான போராளிக்கு யாரும் அஞ்சலி செலுத்தமாட்டார்கள், கடல்கரையில் மெழுகுவர்த்தி பிடிக்கமாட்டார்கள், ஊர்வலம் செல்லமாட்டார்கள், அவர் கொல்லபட்ட வீடு சென்னையில்தானே இருக்கின்றது அந்த திசையை நோக்கி ஒரு ஊதுபத்திகூட கொழுத்தமாட்டார்கள்.
சமீபத்தில் தமிழனத்திற்கு வழிகாட்டி என ஹிட்லர் முதல் திப்புசுல்தான் வரை சம்பந்தமே இல்லாமல் சகட்டுமேனிக்கு பேனர் வைத்திருந்தார்கள். ஒருவேளை தமிழர்களுக்கு வழிகாட்டியருக்கு ஒரு பேனர் வைக்கவேண்டுமென்றால் நிச்சயம் பத்மநாபாவிற்குத்தான் வைத்திருக்கவேண்டும்.
அவர் எப்படி புலிகளோடு சேர்ந்து தற்கொலைகுண்டு, சயனைடு கடிக்காமல் அல்லது வெள்ளைகொடி பிடிக்காமல் மனிதநேயம், மக்கள் வாழ்வு என பேசி மக்களை திரட்டலாம். துப்பாக்கி,சயனைடு,கன்னிவெடி,தற்கொலை பெல்ட் இறுதியாக வெள்ளைகொடி .
இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி தமிழரின் வழிகாட்டியாக இருக்கமுடியும்? முடியவே முடியாது. சிந்திக்க தெரிந்த தமிழன், சாகதீர்கள் அல்லது கொல்லாதீர்கள் என சொல்லும் தமிழன் எல்லாம் "துரோகி".
அப்படி ஒரு போராளி இருந்தான், ஒருங்கிணைந்த ஈழமாநிலத்தை 1 வருடம் ஜனநாயக "மக்கள் முதல்வராக" ஆண்டான் என்பது கூட நினைவு கூற ஆளில்லாத இனமான தமிழகமாக இது ஆகிவிட்டது.
பத்மநாபா கொல்லபட்டபொழுது தனக்கும் நாள்குறிக்கபட்டதை அறியா ராஜிவ்காந்தி இப்படி சொன்னார் "பத்மநாபாவும் எனது தாயார் இந்திராகாந்தியும் ஒரே நாளில் அதாவது நவம்பர் 19ம் தேதி பிறந்தவர்கள், இருவரும் ஈழமக்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தவர்கள், அவர்களை வாழவைக்க எண்ணியவர்கள்"
மிக நிதர்சனமான உண்மை இது.
இந்திராகாந்தியும், பத்மநாபாவையும் தவிர உண்மையாக ஈழமக்களை நேசித்தவர்கள் யாருமில்லை.
அப்படி நேசித்திருந்தால் முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை, கடலில் ஈழதமிழர் படகு, வடக்கில் ராணுவ குவியல் போன்ற வார்த்தைகளுக்கும் அது கொடுத்த கொடுத்துகொண்டிருக்கும் எண்ணற்ற வலிகளுக்கு இடமிருந்திருக்காது.
தன்னலம் துறந்த மானுடநேயமிக்க போராளிகள் ஒருநாளும் மறைவதில்லை. உறுதியாக சொல்லலாம் அவர் "ஈழத்து சேகுவாரா".
No comments:
Post a Comment